வருவாய் நிருவாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகம்
இ-அடங்கல்
ஒவ்வொரு கிராமத்திலும், கிராம நிருவாக அலுவலரால் பராமரிக்கப்படும் அடிப்படை நிலப்பதிவேடாக அடங்கல் விளங்குகிறது. மேலும் விவசாயிகளால் பருவ வாரியாக பயிர் செய்யப்படும் பயிர்களின் விவரம், விளைச்சல், நீர் ஆதாரம் போன்ற பல்வேறு புள்ளி விவரங்கள் இப்பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டு இப்புள்ளி விவரங்கள் ஜி-அறிக்கை (மொத்த சாகுபடி புள்ளிவிவர அறிக்கை) தயாரிக்க உதவுகிறது.
வறட்சி, வெள்ளம் மற்றும் பூச்சி தாக்குதலினால் ஏற்படும் பயிர் சேதங்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்குவதற்கு அடங்கல் முக்கிய ஆவணமாக விளங்குகிறது.
1428-ஆம் பசலி ஆண்டு வரை அடங்கல் பதிவேடானது கிராம நிருவாக அலுவலர்களால் கையினால் எழுதப்பட்டு வந்தது.
இது பணிச்சுமை மிக்கதாகவும், காலம் பிடிக்கக்கூடிய பணியாகவும் இருந்தது. கிராம நிருவாக அலுவலர்களால் கையினால் எழுதி பராமரிக்கப்பட்டு வந்த முறையை எளிமைப்படுத்திடவும், சாகுபடி விவரங்களை துல்லியமாக பெற்றிடவும் அடங்கல் பதிவேட்டினை மின்னனு படிவிற்கு மாற்றம் செய்யும் இ-அடங்கல் திட்டத்தினை செயல்முறைபடுத்த அரசாணை எண்.258, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நாள் 17.08.2017-ன்படி அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் இணையதள இ-அடங்கல் செயலி 26.10.2018 அன்று துவக்கி வைக்கப்பட்டது. மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் அவர்களால் இஅடங்கல் கைப்பேசி செயலி 05.03.2019 அன்று துவக்கி வைக்கப்பட்டது.
கிராம நிருவாக அலுவலர்களால் இதுவரை தயாரிக்கப்பட்டு வந்த அடங்கல் பதிவேட்டில் விவசாயிகள் தங்கள் சாகுபடி விவரங்களை பதிவு செய்யும் நடைமுறை இல்லை. எனவே, விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் தங்கள் சாகுபடி விவரத்தினை தாங்களே இ-அடங்கலில் பதிவிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கிராம நிருவாக அலுவலர் மற்றும் விவசாயிகளால் செய்யப்படும் சாகுபடி பதிவுகளுக்கு இடையே வேறுபாடுகள் இருப்பின், அப்பதிவு தானாகவே அடுத்த உயர்நிலை அலுவலருக்கு குறியீடு செய்யப்பட்டு, அவரது ஆய்வுக்குப்பின் திருத்தம் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, பட்டு வளர்ச்சித் துறை மற்றும் புள்ளியியல் துறையை சேர்ந்த அலுவலர்களும் தங்களின் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள பயிர்சாகுபடி விவரங்களை இச்செயலியில் பதிவு செய்ய தனி சாளர வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் இ-அடங்கல் முறையில் தானாகவே சாகுபடி பயிர்பரப்பு ஒத்திசைவு செய்ய வழி வகை செய்யப்பட்டுள்ளதால், பதிவேடு முறை ஒத்திசைவு களையப்படுகிறது. இ-அடங்கல் முறையில் விவசாயிகள் எவ்வித கட்டணமுமின்றி பதிவுகளை பார்வையிடும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.