தமிழ்நாடு அரசு | Government of Tamil Nadu
        |        |         Screen Reader Access |  A+  A   A-
banner
வருவாய் நிருவாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகம்

விடுதலைப் போராட்ட வீரர்களுக்கும் முன்னாள் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றியவர்களுக்கும் ஓய்வூதியம் மற்றும் ஏனைய பயன்கள்


 • நமது நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்து மிகுந்த துன்பங்களை அனுபவித்த விடுதலைப் போராட்ட வீரர்களுக்கென தமிழ்நாடு அரசு பல நலத்திட்டங்களை முனைப்புடன் நடைமுறைபடுத்தி வருகிறது.
 • சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு நாட்டிற்கு சேவை செய்தவர்களின் தியாகத்தை கவுரவிக்கும் வகையில் அவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் பொருட்டு, விடுதலைப் போராட்டத் தியாகிகள் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், மருத்துவ வசதி, இலவசப் பேருந்து வசதி, வேலைவாய்ப்பு மற்றும் வீடுகள் ஒதுக்கீடு செய்வதில் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகின்றன.
 • விடுதலைப் போராட்ட வீரர்களின் தேசப்பற்று உணர்வை அங்கீகரிப்பதற்காக, அவர்களின் மேலான தியாகத்தைப் போற்றும் வகையில், தமிழ்நாடு அரசு விடுதலைப் போராட்ட தியாகிகள் ஓய்வூதியத் திட்டத்தை 01.10.1966 முதல் செயல்படுத்தி வருகிறது.
 • இத்திட்டத்தின் கீழ், இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டதற்காக மூன்று மாத காலத்திற்குக் குறையாமல் சிறை தண்டனை பெற்றவர்கள் அல்லது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டவர்களும், துப்பாக்கி சூட்டிலோ அல்லது விடுதலைப் போராட்டத்தின் போது காவலர் தடியடியிலோ இறந்தவர்களும் அல்லது நிரந்தரமாக ஊனமுற்றவர்களும் விடுதலைப் போராட்ட வீரர் ஓய்வூதியம் / குடும்ப ஓய்வூதியம் பெறத் தகுதியுடையவர்களாவர். பின்னர், இந்திய தேசிய இராணுவத்தில் பணியாற்றியவர்களுக்கும், 1946-ஆம் ஆண்டு கடற்படை கலகத்தில் பங்கு கொண்டவர்களுக்கும், மதுரை சதித்திட்ட வழக்கில் சிறைத் தண்டனை அடைந்தவர்களுக்கும் இத்திட்டம் நீட்டிக்கப்பட்டது.
 • மேலும், விடுதலைப் போராட்டத்தின் போது பிடியாணை பிறப்பிக்கப்பட்டதைத் தவிர்ப்பதற்காகத் தலைமறைவாக இருந்து விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டவர்களும், சொத்து பறிமுதல் செய்யப்பட்டவர்களும், அரசுப் பணியிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டவர்களும், அதற்கு ஆதாரமாக நீதிமன்ற அல்லது அரசு ஆதாரங்களின் அடிப்படையில் விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் பெறுவர்.
 • 01.04.1980 முதல் ஓய்வூதியம் பெறுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட தகுதி, மூன்று வாரக் கால சிறைவாசம் என குறைக்கப்பட்டது. இந்த ஓய்வூதியம் பெறுவதற்கான வருமான உச்ச வரம்பு 11.03.1983 அன்று முதல் நீக்கப்பட்டது.
 • விடுதலைப் போராட்ட வீரர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்திற் கொண்டு, அவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியமானது அரசால் அவ்வப்போது உயர்த்தப்பட்டு வந்துள்ளது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின் படி தற்போது இவ்வோய்வூதியமானது ரூ.15,000/-லிருந்து ரூ.16,000/-ஆக 15.08.2019 முதல் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.
 • மாநில அரசின் ஓய்வூதியம் பெற்று வருகின்ற விடுதலைப் போராட்ட வீரர் இறக்க நேரிட்டால், இந்த ஓய்வூதியத் தொகையானது அன்னாரின் மனைவிக்கு / கணவருக்கு / உரிய வயதடையாத குழந்தைகளுக்குத் தொடர்ந்து குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது.
 • மேற்படி ஓய்வூதியம் பெற்று வருகின்ற விடுதலைப் போராட்ட வீரர்களின் மகனாயிருந்தால் 18 வயதுக்கு மேலும், மகளாயிருந்தால் 21 வயதுக்கு மேலும், சுயமாய் சம்பாதித்து வாழமுடியாத அளவிற்கு மனவளர்ச்சி குன்றியவராகவோ அல்லது மாற்றுத் திறனாளியாகவோ இருக்க நேர்ந்தால், அவர்களது வாழ்நாள் முழுமைக்கும் தொடர்ந்து ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
 • இறந்த சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கும் பொருட்டு வழங்கப்படும் குடும்ப ஓய்வூதியத் தொகையும் அவ்வப்போது உயர்த்தப்பட்டு வந்துள்ளது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்திரவின் படி தற்போது 15.08.2019 முதல் குடும்ப ஓய்வூதியத் தொகை ரூ.7,500/-லிருந்து ரூ.8,000/-ஆக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.
 • விடுதலைப் போராட்ட இயக்கத்தில் பங்கு கொண்டு நாட்டிற்காக குறிப்பிடத்தக்க வகையில் சிறப்புற பணியாற்றி பெருமை பெற்றவர்களின் தியாகத்தைப் பாராட்டி அங்கீகரிக்கும் வகையில், அவர்களது வாரிசுகளுக்கும் சிறப்பு ஓய்வூதியமானது அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்படி, மாமன்னர் மருதுபாண்டியர் சகோதரர்களின் வழிதோன்றல்கள், மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மனின் நேரடி மற்றும் முதுநிலை வழிதோன்றல்கள், இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாமன்னர் முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதியின் தகுதியான வழிதோன்றல்கள் மற்றும் சுதந்திர போராட்ட தியாகி செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் அவர்களின் வழிதோன்றல் ஒருவர் ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியமானது கடந்த 15.08.2019 முதல் ரூ.7,500/-லிருந்து ரூ. 8,000/-ஆக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.
 • தற்போது, மாமன்னர் மருதுபாண்டியர் சகோதரர்களின் வழிதோன்றல்கள் 86 நபர்களுக்கும், மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மனின் நேரடி மற்றும் முதுநிலை வழிதோன்றல்கள் 4 நபர்களுக்கும், இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாமன்னர் முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதியின் தகுதியான வழிதோன்றல் 56 நபர்களுக்கும் மற்றும் சுதந்திர போராட்ட தியாகி செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் அவர்களின் வழிதோன்றல் ஒருவருக்கும் இந்த சிறப்பு ஒய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. மேற்கண்ட சிறப்பு ஓய்வூதியம் அவர்கள் வாழ்நாள் முழுவதற்கும் வழங்கப்படும்.

விடுதலைப் போராட்ட வீரர்களுக்கும் அவர்களது வாரிசுகளுக்கும் வழங்கப்படும் ஏனைய சலுகைகள் பற்றிய விவரம் பின்வருமாறு:
அ) மருத்துவ வசதிகள்:

 • மத்திய அரசிடமிருந்தோ அல்லது மாநில அரசிடமிருந்தோ அல்லது இரண்டு அரசுகளிடமிருந்தோ ஓய்வூதியம் பெற்று வருகின்ற அனைத்து விடுதலைப் போராட்ட வீரர்களுக்கும் / விதவைகளுக்கும் / உரிய வயதடையாத குழந்தைகளுக்கும் மருத்துவப்படி வழங்கப்பட்டு வருகிறது.
 • இந்த தொகையானது மாதமொன்றிற்கு ரூ.100/-லிருந்து ரு.500/-ஆக உயர்த்தப்பட்டு 15.08.2012 முதல் வழங்கப்பட்டு வருகிறது. மேற்கூறிய விடுதலைப் போராட்ட வீரர்கள் அல்லது அவரது வாரிசுதாரர்கள் மருத்துவ சிகிச்சைக்காக பழைய அரசு மருத்துவமனைகளுக்கு வரும்போது ‘அ’ வகுப்பு வசதிகளுடன் கூடிய இலவச மருத்துவ சிகிச்சையும், புதிய மருத்துவமனைகளில் கட்டணப் பிரிவுகளில் எந்தவித கட்டணமும் இல்லாமல் உயர்தர சிகிச்சையும் வழங்கப்படுகிறது.

ஆ) போக்குவரத்து வசதி மற்றும் வீட்டு வசதி:

 • மத்திய மற்றும் மாநில அரசு ஓய்வூதியம் பெறும் விடுதலைப் போராட்ட வீரர்களுக்கும், விடுதலைப் போராட்ட வீரர்களின் விதவைகள் மற்றும் ஓய்வூதியம் பெற்று வரும் வாரிசுகளுக்கும் அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்யவும் மற்றும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் ஒதுக்கீடு செய்யும் வீடுகளில் / மனைகளில் / அடுக்கு மாடி குடியிருப்புகளில், விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு முன்னுரிமையின் அடிப்படையில் வீடுகள் ஒதுக்கப்படுகிறது.

இ) வேலை வாய்ப்பில் முன்னுரிமை :


 • வேலை வாய்ப்பு அலுவலகங்களிலிருந்து அரசுத் துறைகளுக்கும் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களுக்கும் வேலை வாய்ப்புக்குத் தகுதியான பெயர் பட்டியல் அனுப்பப்படும் போது விடுதலைப் போராட்டத் தியாகிகளின் சட்டப்படியான வாரிசுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.

ஈ) ஈமச்சடங்குச் செலவு:


 • விடுதலைப் போராட்ட வீரர் இறந்தால், அவர்தம் ஈமச்சடங்குச் செலவுக்காக விடுதலைப் போராட்ட வீரரின் மனைவிக்கு அல்லது அவருடைய நேரடி வாரிசுதாரர்களுக்கு உதவித் தொகையாக ரூ.5000/- உடனடியாக வழங்கப்பட்டு வருகிறது.
 • இறந்துபோன விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு வட்டாட்சியருக்கு குறையாத பதவியிலுள்ள வருவாய்த்துறை அலுவலர் ஒருவரால் அரசு சார்பில் மறைந்தவரின் உடல் மீது மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்படுகிறது.
 • மாநில அரசின் / மத்திய அரசின் ஓய்வூதியம் அல்லது இவ்விரண்டு ஓய்வூதியங்களையும் பெறுகின்ற விடுதலைப் போராட்ட வீரர்கள் அனைவருக்கும் இது பொருந்தும்.

தற்போது மாநில அரசின் பல்வேறு வகையான ஓய்வூதியங்களை பெறும் விடுதலைப் போராட்ட வீரர்களின் எண்ணிக்கை பின்வருமாறு:

வ. எண் ஓய்வூதிய வகைகள் எண்ணிக்கை
1 மாநில ஓய்வூதியம் பெறும் விடுதலைப் போராட்ட வீரர்கள் (மாதமொன்றிற்கு ரூ.16,000/- மற்றும் ரூ.500/- மருத்துவப்படி) 181
2 மாநில அரசின் குடும்ப ஓய்வூதியம் பெறும் விடுதலைப் போராட்ட வீரர்களின் வாரிசுதாரர்கள் (மாதமொன்றிற்கு ரூ.8,000/- மற்றும் ரூ.500/- மருத்துவப்படி) 994
3 மாமன்னர் மருதுபாண்டியர் சகோதரர்களின் வழிதோன்றல்கள் (மாதமொன்றிற்கு ரூ.8,000/- வீதம்) 86
4 மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் வழிதோன்றல்கள் (மாதமொன்றிற்கு ரூ.8,000/- வீதம்) 4
5 மாமன்னர் முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதியின் வழிதோன்றல்கள் (மாதமொன்றிற்கு ரூ.8,000/- வீதம்) 56
6 சுதந்திர போரட்ட தியாகி செக்கிழுத்த செம்மல் வ. உ. சிதம்பரனார் அவர்களின் வழிதோன்றல் (மாதமொன்றிற்கு ரூ.8,000/- வீதம்) 1

மத்திய அரசின் ஓய்வூதியத் திட்டம் :
15.08.1972 முதல் மத்திய அரசும் விடுதலைப் போராட்ட வீரர்கள் ஓய்வூதியத் திட்டத்தை (ஸ்வதந்திரதா சைனிக் சம்மான் பென்சன்) செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்படி வழங்கப்படும் சலுகைகள் பின்வருமாறு:-
அ) மத்திய அரசு விடுதலைப் போராட்ட வீரர் ஓய்வூதியம் பெறும் ஒவ்வொருவருக்கும் மாதமொன்றிற்கு ரூ.26,000/- ஓய்வூதியத்துடன் அகவிலைப்படியும் சேர்த்து வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு மத்திய அரசு ஓய்வூதியம் பெற்று வரும் விடுதலைப் போராட்ட வீரர்கள் மற்றும் வாரிசுதாரர்களின் எண்ணிக்கை 876 ஆகும்.
ஆ) மத்திய அரசு விடுதலைப் போராட்ட வீரர் ஓய்வூதியம் / மத்திய அரசு குடும்ப ஓய்வூதியம் பெறுபவருக்கு, மாநில அரசின் நிதியிலிருந்து, மாதமொன்றிற்கு ரூபாய் 500/- ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வருகிறது.
மாநில அரசால் விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு மற்றும் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியத் தொகை விவரம்;

Untitled Document